கொலை வழக்கில் மகனுடன் பெண் கைது

மதுரை பெண் கொலை வழக்கில்
மகனுடன் பெண் கைது
மதுரை, ஜூலை 31
மதுரை, பைபாஸ் ரோடு, நேரு நகரை சேர்ந்த தங்கம், அதே பகுதியில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி பஞ்சவர்ணம். கடந்த 16ம் தேதி பகலில் வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது அவரை கொலை செய்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் மிளகாய் பொடியை தூவி கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு பெண் அவரது வீட்டு பகுதியில் அடிக்கடி சென்று, வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த 4 பெண்களை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் ஆணையூரை சேர்ந்த அழகம்மாள், 32 என்பவரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணன், 22 மற்றும் தனது 15 வயது மகன், அண்ணனின் 15 வயது மகன் ஆகியோருடன் சேர்ந்து பஞ்சவர்ணத்தை கொலை செய்து, நகை பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
அழகம்மாள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தனது கணவர் பாண்டி கூலி வேலை செய்கிறார். நான் காய்கறி கீரை, காய்கறி விற்று வருகிறேன். ஆனையூர் கண்மாயில் மீன் பிடிக்க வந்த ஓத்தகடையை சேர்ந்த ராஜேஷ் கண்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தன்னிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து தருமாறு கேட்டார். தெரிந்தவர்களிடம் நகையை அடகு வைத்து அவரிடம் பணம் கொடுப்பேன். இதில் எனக்கும் பங்கு தருவார். அதன் பிறகுதான் அவர் திருட்டில் ஈடுபடுவது எனக்கு தெரியவந்தது. இது பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு வசதி உள்ளவர்களிடம்தானே கொள்ளை அடிக்கிறேன் என்றார். மேலும் வசதியானவர்கள் பற்றி தெரிந்தால் கூறும்படி என்னிடம் கேட்டார். நான் பஞ்சவர்ணம் பற்றி அவரிடம் தெரிவித்தேன்.
சம்பவத்தன்று நான், ராஜேஷ் கண்ணன், எனது மகன் மற்றும் எனது அண்ணன் மகன் ஆகியோருடன் பஞ்சவர்ணம் வீட்டிற்கு சென்றோம். நான் ஆட்டோவில் அமர்ந்திருந்தேன். மூவரும் பஞ்சவர்ணம் வீட்டிற்குள் சென்று மிளகாய் பொடியை தூவி நகை பணத்தை பறித்தனர். அப்போது பஞ்சவர்ணம் கூச்சலிட்டதால் அவரை கத்தியால் குத்தியதில் அவர் இறந்து விட்டார். பிறகு நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: