குண்டும் குழியுமான ரோடுகள்

வழியிலே கொஞ்சம் பள்ளம், மேடு
கரணம் தப்பினால் மரணம் தான்
மதுரை, ஜூலை 31
மதுரையில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகள் மழைக் காலம் துவங்கும் முன் பராமரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.
மதுரை மாநகரில் உள்ள ரோடுகள் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஒருசில ரோடுகளை தவிர மாநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாகவே உள்ளன. மாநகராட்சியோ, பொதுப்பணித்துறையோ ரோடுகளை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை தமிழ் சங்கம் ரோட்டிலிருந்து அரசரடி வரை செல்லும் புது ஜெயில் ரோட்டில் பல இடங்களில் ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுபற்றி வணக்கம் இந்தியா நாளிதழில் செய்தி வெளியிட்டது. அப்போது பெரிய பள்ளங்களை மட்டும் ‘பேட்ஜ் வொர்க்’ மூலம் ஒட்டு போட்டனர். தற்போது மதுரா கோட்ஸ் பாலத்திலிருந்து அரசரடி சந்திப்பு வரை உள்ள ஜெயில் ரோடு முழுவதும் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து காயங்களுடன் செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. மேலும் இந்த ரோட்டில் உள்ள மின் விளக்குகளும் எரிவதில்லை.
மழைக் காலம் துவங்கி விட்டால் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரிய வாய்ப்பில்லை. இதனால் வாகன விபத்துகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் ரோடும் கூடுதலாக சேதமடைந்து விடும். எனவே விபத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை துவங்கும் முன் பழுதான ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்க எடுபார்களா என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: