ராணுவ குடும்பத்துக்கு வீரத்தாய் விருது:

ராணுவ குடும்பத்திற்கு வீரத்தாய் விருது

மதுரை, ஜூலை 30

மதுரை மேலூரில் தந்தை, மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததை அங்கீகரிக்கும் வகையில் அவரது தாயாருக்கு வீரத்தாய் விருது வழங்கி கவுரவித்தனர்.
மதுரை, மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரணன் என்ற ஜெயபிரகாஷ். இவரது மனைவி ராஜலட்சுமி. ஜெயபிரகாஷ் 1964 முதல் 1989 வரை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 1972ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்றவர் என்ற பெருமை உண்டு. ராணுவ அதிகாரியான தனது கணவரின் ஓய்வுக்கு பிறகு, தமது இரண்டு மகன்களையும் நாட்டுக்காக உழைக்க இந்திய ராணுவத்தில் சேர ராஜலட்சுமி வாழ்த்தி அனுப்பினார். மூத்த மகன் ராஜசேகரன் ராணுவத்தில் பணியாற்றி 2011 ஓய்வு பெற்று, தற்போது மேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 2வது மகன் ராஜேஸ்தேவன் 1996ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 1999 நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்றார். இந்த பெருமையோடு 2018ல் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் நாட்டுக்காக கணவர், மகன்கள் என 3 பேரையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பி வைத்த ராஜலட்சுமியின் தேச பக்தியைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் மதுரையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல அமைப்பின் சார்பில் ராஜலட்சுமி வீரத்தாய் விருது, நினைவு பரிசு, வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவித்தனர். வீரத்தாய் விருது பெற்று ஊர் திரும்பிய ராஜலட்சுமியை அ.வல்லாளப்பட்டி கிராம பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: