டிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி…

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கிற்கு இணையாக புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியால் சண்டை, சச்சரவு வராது என்றும், தனி மனித தகவல்கள் எதையும் யாரும் எடுக்க முடியாது என்பது போன்ற அவரது உறுதியளிப்பு, செயலி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆன்ட்ராய்டு செல்லிடபேசி பயன்படுத்தும் 75 சதவிகிதம் பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களாக இருந்து வந்தனர். இந்த செயலியால் ஜாதி, மத ரீதியான பிரச்னைகள், குடும்ப சூழலை பாதிக்கும் பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகள் இருந்தன. இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில்தான் எல்லைப் பிரச்னையை தொடர்ந்து சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த பட்டியலில் டிக்டாக் செயலியும் சிக்கியது. இதன்பிறகு இந்த செயலிக்கு மாற்று, இந்திய தயாரிப்பு என சில செயலிகள் வந்துள்ளன. இருப்பினும் புதிய டிக்டாக் போன்று இல்லை என்று இதனைப் பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் டிக்டாக் போன்று, கருத்துச் சொல்லும் வாய்ப்பு இல்லாத ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். அதன் இறுதிகட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செயலியை உருவாக்கியுள்ள ஈரோடு மேட்டூர் சாலையை சேர்ந்த கணினி பொறியாளர் டி.குமரவேல் கூறியதாவது:

மின்னியல், மின்னணுவியல், பொறியல் துறையில் பட்டதாரியான நான், தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமானம், ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட வடிவமைப்பு தொழிலை செய்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொழில் ஈடுபட்டுள்ள நான், டிக்டாக் செயலியால் ஏற்படும் பிரச்னைகளை அறிந்து அதற்கு மாற்றாக, அந்த செயலிக்கு இணையாக, அந்த செயலியால் ஏற்படும் தனி மனித, சமூக பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு, ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய செயலியை உருவாக்கும் பணியை கடந்த 10 மாதங்களுக்குள் முன்பு தொடங்கினேன்.

இந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் நான் தயாரிக்கும் செயலியை விரைந்து முடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தாயாரிப்பு செயலிக்கு Fun Bun என பெயரிட்டு GOOGLE நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளேன். வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடயை அலுவலகத்தில் உள்ள 40 பணியாளர்களும் என் முயற்சிக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த பணிக்காக இதுவரை எனது சொந்த வருவாயில் ரூ. 22 லட்சம் செலவு செய்துள்ளேன். Fun Bun செயலியில் யார் வேண்டுமானாலும் எவ்வித அச்சமும் இல்லாமல், பாதுகாப்புடன் விளையாடலாம்.

அதிகபட்ச பாதுகாப்புடனும், தனிநபர் தகவல்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் தகவல்கள், விவரங்களை எடுக்க முடியாதபடி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட முதல் செயலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Fun Bun செயலியை 1,000 நபர்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து வருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளைக் களைந்த பிறகு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த செயலியை மக்களிடம் கொண்டு செல்ல பரிசுப் போட்டிகளை அறிவிக்கவுள்ளோம்.
Fun Bun செயலி டிக்டாக் ஏற்படுத்திய அத்தனை பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டதாகவும், அதே சமயத்தில் மக்கள் விரும்பும் செயலியாகவும் இருக்கும்.

கணினி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆதிக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இந்திய மக்கள் இந்திய தயாரிப்பு கணினி தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்ற வேட்கை, எல்லை பிரச்னைக்கு பிறகு அதிகரித்துள்ளது.

இதனால் டிக்டாக் செயலிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத செயலியை உருவாக்கியுள்ளோம். இந்த செயலி மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் தொடர்ந்து மேம்படுத்துவோம்.

சீன செயலிகளுக்கு அதிகமாக மொபைல் டேட்டா அதிகம் செலவாகும். Fun Bun செயலி பயன்படுத்துவதால் மொபைல் டேட்டாவும் அதிகம் செலவாகாது. இதுபோலவே வருங்காலத்தில் கூகுள் போன்றொரு புதிய செயலியை உருவாக்கிடவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் குமரவேல்.

  • கே.சி.கந்தசாமி

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: