மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…

திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு:

மதுரை

திருப்பரங்குன்றம் அருகே பல்லாண்டு காலமாக மக்களின் வழிபாட்டில் இருந்த திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

தியாகராஜர் கல்லூரியிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் செல்லும் சாலையின் வளைவில் சுமார் நான்கடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட பலகைக்கல் ஒன்றில் திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களின் கீழே திருவள்ளுவர், நந்தநார் என்று கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன.

கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் தொல்லியல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் இணைந்து இந்தக் கள ஆய்வில் மேற்காணும் சிற்பங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் தேவி கூறுகையில், இக்கல்வெட்டுகளைக் கொண்டு இப்பலகைக்கல்லில் உள்ள முனிவர்களைப் போன்று நீண்ட தாடி, மீசையுடன் காணப்படும் இரு ஆண் உருவங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் பீடத்தின் மீது இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இடது கையில் சுவடிகளைத் ஏந்தியும், வலதுகையில் எழுத்தாணியைப் பிடித்தபடியும் உள்ளார். தலையில் தலைப்பாகை (முண்டாசு போன்று) காணப்படுகின்றது. நீண்டு தொங்குகின்ற மீசை, மார்பு வரை நீண்டுள்ள தாடியுடன் தோற்றமளிக்கும் புலவரின் மார்பில் யக்ஞோபவீதம் என்னும் முப்புரிநூல் காட்டப்பட்டுள்ளது. மேலும் கழுத்தில் பதக்கத்துடன் கூடிய முத்துமாலை காணப்படுகின்றது. கணுக்கால் வரையிலான நூலாடை மடிப்புகளுடன் கூடியதாக அணிந்துள்ளார். சற்று பருத்த உருவத்தினராய் காட்டப்பட்டுள்ள திருவள்ளுவரின் விழிகள் பெரியதாக மூடிய நிலையில் உள்ளன. அவரின் காலடிக்கு கீழே திருவள்ளுவர் என்ற கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இப்புடைப்புச்சிற்பத்தின் அருகே மற்றுமொரு சிற்பம் முன்னவரைப் போன்றே நீண்ட தாடி, மீசையுடன் யானையின் மீது அமர்ந்துள்ளார். இச்சிற்பத்தின் கீழே “நந்தநார்“ என்று கல்வெட்டு பொறிப்புக் காணப்படுவதால் இவரை 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் என்று கருதவேண்டியுள்ளது. திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாளைப்போவார் நாயனார் என்றழைக்கப்படும் நந்தனாரின் வரலாறு தனித்துவமானது. புலையர் இனத்தில் பிறந்து சைவத்தின் புறத்தொண்டு புரிந்து இறைவனடி அடைந்த நந்தனார் சரித்திரம் “ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே“ என்ற அப்பரின் வாக்கிற்கேற்ப நாயன்மார் ஆனார் நந்தனார் என்னும் திருநாளைப்போவார்.

இச்சிற்பத்தில் நந்தனார் தன்னுடைய கழுத்தில் தோற்வார்ப்பட்டையுடன் மாட்டியுள்ள சிறிய பறையை இரு கைகளாலும் முழக்குவதாக இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி சுகாசனத்தில் அமர்ந்துள்ள நந்தனார் முன்னவரான திருவள்ளுவர் போன்ற தொங்கும் மீசையுடன் மார்பு வரை நீண்டுள்ள தாடியுடன் காணப்படுகிறார். ஆனால் அவரைப் போன்று அல்லாது சற்று ஒடுங்கிய தேகம் கொண்டவராய் காணப்படும் நந்தனாரின் மார்பில் புரிநூல் காட்டப்படவில்லை. பறையின் வார்ப்பட்டை மட்டுமே கழுத்தில் தெரிகின்றது. இவரும் கணுக்கால் வரை ஆடை அணிந்துள்ளார். நந்தனார் யானை மீது அமர்ந்து பறை முழக்குவதாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மடக்கிய துதிக்கையில் பழம் போன்ற ஒன்றை யானை பிடித்துள்ளது. யானையின் முகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது.

பெரியபுராணத்தின் நந்தனாரின் புராணத்திற்கும் இச்சிற்பத்திற்கும் உள்ள தொடர்பு யாதென்று தெரியவில்லை.
இச்சிற்ப பலகை வேறு எங்கேனும் இருந்து அதாவது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புனரமைப்பின் போது இங்கு கொண்டு வரப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றதா என்பது ஆராயப்படல் வேண்டும். எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடி கையிலிருப்பதால் திருவள்ளுவரின் உருவமைதியை அக்கல்வெட்டுப் பெயர் மெய்ப்படுத்துகிறது. ஆனால் திருவள்ளுவரின் அருகில் அதுவும் ஒரே பலகைக் கல்லில் நந்தனாரின் சிற்பம் செதுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பது மேலும் ஆய்வுக்குரியது. அச்சிற்பம் நந்தனார் தான் என்பது கீழே உள்ள கல்வெட்டினால் உறுதிப்பட்டாலும் அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியை நோக்குகையில் சிற்பத்தின் உருவமைதி காட்டும் காலத்தை விட சற்று பிற்காலத்தியதாக தோன்றுகிறது. இந்நிலையும் ஆய்வுக்குரியது என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: