மதுரை அருகே நீதிகேட்டு போராடும் பெண்..

*காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் கணவரின் குடும்பத்தினர் – கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் – உதவிக்கரம் நீட்டிய திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்:

மதுரை

திருப்பரங்குன்றத்தில் உள்ள கீழரத வீதியை சேர்ந்த பட்டதாரியான மகாலட்சுமி (வயது 23) என்பவர், அதே தெருவில் வசித்து வரும் கொத்தனாரான நாகராஜ் என்பவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்

இந்தநிலையில் இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த பெண்ணை, மாப்பிள்ளை வீட்டார் ஏற்க மறுத்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து காதலர்கள் இருவரும், விருதுநகரில் உள்ள மணப்பெண்ணின் அக்கா வீட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். நாகராஜ் அங்கேயே வேலை பார்த்துக்கொண்டு, ஆறு மாதகாலம் இருவரும் சந்தோசமாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், நாகராஜின் தாயார், தனது மகனின் மீதான கோவம் தணிந்ததாகவும், உங்கள் இருவரையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறி, இருவரையும் மதுரைக்கு வர சொல்லியுள்ளார்.

தாயின் சொல்லைக்கேட்டு நாகராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருந்த மஹாலக்ஷ்மியை சிறிது காலம் அவரது தாயார் வீட்டில் இருக்குமாறு நாகராஜின் தாயார் வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மஹாலக்ஷ்மி அவரது வீட்டிற்கு சென்றதையடுத்து, நகராஜிற்கு அவரது குடும்பத்தினர் பொருளாதாரத்தில் உயர்ந்த வீட்டில் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் மஹாலக்ஷ்மிக்கு தெரிய வரவே நாகராஜின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இந்நிலையில் நாகராஜை அவரது குடும்பத்தினர் மறைத்து வைத்துக்கொண்டு, அவன் இனிமேல் வரமாட்டான் என்றும், அவனுக்கு வேறு கல்யாணம் வைக்கப்போவதாகவும் கூறி கர்ப்பிணி பெண் மஹாலக்ஷ்மியை விரட்டியடித்துள்ளனர்.

தொடர்ந்து தன் கணவருக்காக நாகராஜ் வீட்டாருடன் மோதிய மஹாலக்ஷ்மி, இறுதியாக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தன் கணவர் வீட்டாருக்கு எதிராக புகார் அளித்தநிலையில், வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் தனிக்குழு அமைத்து நாகராஜை தேடும் முயற்சியில் இறங்கினர்.

தொடர்ந்து நாகராஜின் வீட்டார் நாகராஜை உள்ளூரிலும், வெளியூரிலும் ஒளித்துவைத்துக் கொண்டு அவன் இங்கு இல்லவே இல்லை என நாடகம் ஆடியுள்ளனர்.

கர்ப்பிணியாக இருந்த மஹாலக்ஷ்மி, தற்பொழுது மூன்று மாத கைக்குழந்தையுடன் தன் கணவர் திரும்பி வருவார் என்ற ஏக்கத்திலேயே காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கர்ப்பிணியாக வந்த மகாலட்சுமிக்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து தற்போது வரை அனைத்து உதவிகளையும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா செய்து வருகிறார்.

இதுபோன்று பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடைபெற்று வருவதாலும் இதனை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதாக காவல் ஆய்வாளர் மதன கலா தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: