சென்னிமலை கோயில் ரோட்டின்

வரலாறு.

மலரும் நினைவுகள் ..!
*"தமிழ்நாட்டில், மலை மேல் உள்ள கோவிலுக்கு – இறைவழிபாட்டுக்கு முதல் முதலாக "மோட்டார் வாகனப் பாதை” அமையப்பெற்ற சென்னிமலை !!*

· 56 ஆண்டுகளுக்கு முன்,சென்னிமலை
மலை தார்ச்சாலை திறப்பு நாள் ஆகஸ்ட் 25, 1964.

* தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல்,
ஏற்காடு போன்ற மக்கள் வசிக்கின்ற மலைப்பகுதி ஊர்களுக்குப் பயணிக்க பற்பல ஆண்டுகளுக்கு முன்பே “மலைப் பாதைகள்-தார் சாலைகள்” இருந்தன

*ஆனால், பக்தர்கள் மோட்டார் வாகனங்களில் பயணித்து மலை மேல் உள்ள கோயிலில் வழிபாடு செய்ய, தமிழகத்தில் முதன் முதலில் மலைப்பாதை – “தார்ரோடு” அமைக்கப்பெற்ற திருத்தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.

* 1964ஆம் ஆண்டு – இன்றைக்கு 56
ஆண்டுகளுக்கு முன், இதே தேதியில் 25.08.1964 அன்றைய தமிழ்நாடு ஆளுநராக இருந்த, மைசூர் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் அவர்கள் சென்னிமலை மலைப்பாதையை (தார்ரோடு) (GHATWAY) திறந்து வைத்தார்.

*அன்றைய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பழையகோட்டை பட்டக்காரர் மன்றாடியார்,
அன்றைய தமிழ்நாடு தொழில் அமைச்சராக இருந்த, பின்னாளில் இந்திய ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன்,
அறநிலையத் துறை ஆணையர் எம்.எஸ். சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

* 1964 ஜனவரி மாதம் தைப்பூசத்தன்று மோட்டார் வாகனங்கள் பயணம் செய்யத் தயாரானது.

*வெள்ளோட்டமாக,
முதன் முதலில் மலைப் பாதையில் பயணித்தவர்கள் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பார்வதி அர்ச்சுனன்,
குன்றக்குடி அடிகளார்,
பொள்ளாச்சி தொழிலதிபர் அருட்செல்வர், என்.மகாலிங்கம் ஆகியோர்.

* மைசூர் மகாராஜா அவர்களின் திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, மலைத் தார்ச்சாலை பொதுமக்கள்/பக்தர்களின் போக்குவரத்துக்கு அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

*15.2.1963 அன்று, அன்றைய காலகட்டத்தில் தமிழக அறநிலையத்துறை அமைச்சராகவும் பிறகு தமிழக முதலமைச்சராகவும் இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள், மலைப்பாதை அமைக்கும் பணியைத் துவக்கி வைத்தார்.

*திட்டத்துக்கான வேண்டுகோள்*" :
20.11.1959 அன்று சென்னிமலைக் கோவில் திருப்பணியைத் தொடக்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு அமைச்சர் பக்தவத்சலம் அவர்களிடமும், 24.01.1961 அன்று சென்னிமலைக் கோவிலைப் பார்வையிட வந்த அறநிலையத்துறை துணை ஆணையர் டி ராமிலிங்க ரெட்டியார் ஆகியோரிடமும் சென்னிமலைக் கோவிலுக்கு பக்தர்கள் மோட்டார் வாகனங்களில் வந்து செல்ல “தார் ரோடு” அமைக்க வேண்டுகோள் விடுத்தவர்கள் சென்னிமலைத் திருக்கோயிலின் அன்றைய டிரஸ்டு (அறங்காவலர்குழு) தலைவர் ஈங்கூர் ஈ.ஆர். கந்தசாமிக் கவுண்டர். டிரஸ்டு உறுப்பினர்கள் ஜி ராஜமன்னார் செட்டியார், எஸ் கே மாரியப்ப முதலியார், நிர்வாக அதிகாரி சென்னியங்கிரிவலசு சி எஸ் சுப்ரமணியம் ஆகியோர்.

*டிரஸ்ட்டின் வேண்டுகோளை ஏற்று, சாலை அமைக்க உகந்த சூழ்நிலை மற்றும் திட்ட மதிப்பீடு செய்ய, அரசு அறநிலையத்துறை ஆந்திராவில் திருமலை-திருப்பதி, ஸ்ரீசைலம், சிம்மாசலம் மலைக் கோவில்களுக்குப் பாதை அமைத்தவரும்,
இந்திய அரசின் பொறியியல் ஆலோசகருமான திரு ஏ.நாகேஸ்வர ராவ் அவர்களை நியமித்தது.

*மலையைப் பார்வையிட்ட பொறியியலாளர் நாகேஸ்வர ராவ், 27 அடி அகலம், சுமார் 3
மைல் தூரமுள்ள மலைப் பாதை அமைக்கச் செலவு ரூபாய் 2,84,000 (இரண்டு லட்சத்து எண்பத்து நான்காயிரம்), 12 கொண்டை வளைவுகளுடன்(HAIRPIN BEND) சாலை அமைக்க திட்டம் வகுத்தார்.

* பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பில், ஒரே வருடத்தில், திட்டமிட்ட தொகையை விடக் குறைந்த செலவிலும், திட்டமிடப்பட்ட 12 கொண்டை வளைவுகளுக்குப் பதிலாக, வாகனங்களுக்கு இடர்பாட்டைக் குறைக்க 9 கொண்டைவளைவுகளுடனும், பக்கவாட்டுச் சுவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடனும் மலைத் தார்ச்சாலை தயாரானது.

*சென்னிமலை தேவஸ்தானம், பழனி தேவஸ்தானம், பண்ணாரி மாரியம்மன் தேவஸ்தானம் ஆகியவையும், பழையகோட்டை பட்டக்காரர், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பார்வதி அர்ச்சுனன் மற்றும் பொதுமக்கள் பலரும் மலைப்பாதை பணிக்கு நன்கொடை அளித்தனர்.
அழகான மலைப்பாதை முகப்பு (ENTRANCE ARCH) திருப்பணிக்குழுத் தலைவர் ஈங்கூர் திரு.ஈ.ஆர். கந்தசாமிக் கவுண்டரின் மூத்த சகோதரர் ஈ.ஆர் வெங்கடாச்சலக் கவுண்டர் நினைவாக அவரது மகன் ஈ.வி. குமாரசாமிக் கவுண்டர் நன்கொடையால் அமைக்கப்பட்டது.

* 1980களில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஈரோடு திரு. சு. முத்துசாமி அவர்கள், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் பக்தர்களின் மலைவழி போக்குவரத்துக்கு ஜீவா போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு பேருந்து வழங்கினார். இப்போது இரண்டு பேருந்துகள் மலை அடிவாரம் முதல் மலை உச்சிக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்று வருகிறது.

* தமிழக மலைக்கோயில் தார்ச்சாலைக் கட்டமைப்பில் அமைந்த முதல் சாலை என்ற வரலாற்றுச் சிறப்புக் கொண்ட சென்னிமலை மலைப்பாதை அமைக்க, தீர்க்கதரிசனமாக முன்னெடுப்புச் செய்த கோயில் டிரஸ்ட் நிர்வாகத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,சாலை அமைப்பு மற்றும் பொறியியல் துறை வல்லுனர்கள், ஊழியர்கள், சாலைத் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் நமது நன்றி பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.

*"சேர வாரீர் சென்னிமலைக்கு*"

– நன்றி : சென்னிமலைத் தலவரலாறு – கட்டுரை ஆசிரியர்களுக்கு. 🙏

க செ கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: