பழனி ஆலயத்தில் தரிசன பாதை மாற்றம்..

பழனி முருகன் கோவிலில் தரிசன பாதை மாற்றம்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் முன்அனுமதி சீட்டு பெற்று சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் படிப்பாதை நுழைவு பகுதியில் மருத்துவக்குழுவினர் காய்ச்சல், சளி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்த பின்னரே பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி சாமி தரிசனத்துக்கான பாதையில் கோவில் நிர்வாகம் மாற்றம் செய்ய உள்ளது.

அதன்படி அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு அரங்கு வழியே படிப்பாதையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும், தரிசனம் முடிந்ததும் மலைக்கோவிலில் இருந்து பாதவிநாயகர் கோவிலுக்கு செல்லும் படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மழையில் நனைவது தடுக்கப்படும். இதற்காக ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பக்தர்களுக்கான பஞ்சாமிர்தம் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் அதிக அளவில் பக்தர்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்களை பாதுகாப்பதற்காக ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: