கரூர் விஜயலட்சுமி

மகள் இறந்து இன்சூரன்ஸ் ரூ.10,000 பெற்று பஞ்சர் ஒட்டும் கடை வைத்து, இன்று சொந்த டிராக்டர் வாங்கி உழவுக்குத்தானே ஓட்டிச் செல்லும் 56 வயது கரூர் விஜயலட்சுமி!

கரூரிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூர் பகுதில் பஞ்சர் கடை வைத்திருக்கிறார் 56 வயது விஜயலட்சுமி.பெண்களுக்கு மட்டுமல்ல,
ஆண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும்
சுறுசுறுப்பான முன் மாதிரி இவர்!

பஞ்சர் கடை என்றால் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை அல்ல. டாரஸ், டிரைலர் லாரி முதல் டிராக்டர் வரை மிகப்பெரிய கனரக வாகனங்களில் டயர்களை ஒன்டியாகக் கழற்றி பஞ்சர் ஒட்டும் பணி.. அதுவும் 24 மணி நேரமும் பஞ்சர் ஒட்டித் தரும் பணி.

விஜயலட்சுமி பஞ்சர் ஒட்டுவது மட்டுமில்லாமல், டிராக்டர் மூலம் உழவுப் பணியும் இப்போது செய்து வருகிறார். குடும்பத்தலைவியாக வீட்டு வேலை, தோட்டத்து வேலை என அனைத்துப் பணிகளையும் செய்யும் இவரைப் பார்த்தால் பிரமிப்பாகத்தான் உள்ளது.

காலையில் வீட்டு வேலைகளை முடித்து தனது தாய்க்கும் கணவருக்கும் உணவு செய்து கொடுத்து விட்டு தோட்டத்திற்குச் சென்று கால்நடைகளுக்குத் தீவனம் அறுத்துக் கொண்டுவருகிறார்.. இந்தப் பணிகளை முடித்து விட்டு பஞ்சர்கடை பணிக்கு வந்து விடுகிறார்.சாதாரண இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை டயர்களை எளிதாகக் கழற்றி பஞ்சர் ஒட்டுகிறார், தனி ஆளாக..உழவுப் பணிக்கு டிராக்டர் ஓட்ட அழைப்பு வந்தால் அதையும் தட்டாமல் சென்று செய்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்று அவரிடம் கேள்வி கேட்ட போது .தான் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார்…

கரூர் அருகே தரகம்பட்டி கிராமத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கரூர் வந்திருக்கிறார் விஜயலட்சுமி. ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனது கணவர் தங்கவேலுவுடன் மகிழ்வான வாழ்க்கைதான் ஆரம்பத்தில் நடத்தி வந்துள்ளார். கணவர் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்த நிலையில், திடீரென பேருந்து விபத்து ஏற்பட கணவர் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

குழந்தைகளுடன் செய்வதறியாமல் தவித்த விஜலட்சுமியிடம் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று அவரது கணவர் கூறியுள்ளார். தனது கணவருக்கு தைரியம் சொன்ன விஜயலட்சுமி தனது கணவரின் தம்பிகள் வைத்திருந்த பஞ்சர் கடையில் பணி செய்யத் தொடங்கினர்.

தனது கணவர் மீண்டு வரும் சூழலில் அடுத்த அடி விஜயலட்சுமிக்கு இடியாக வந்து விழுந்தது. பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மகள் அருகில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் விழுந்து இறந்திருக்கிறார்.மனம் கலங்கி சோர்ந்து போனார் விஜயலட்சுமி.

குடும்பத்தை ஓட்டுவதற்கே சிரமம் ஏற்பட்டச் சூழலில் தனியாக பஞ்சர் கடை வைக்க முடிவு செய்தார். பணத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையில் மூழ்கினார்.

இந்த நிலையில் அவரது மகள் பள்ளியில் இன்சுரன்ஸ் பணம் கட்டியிருந்ததாகவும் இறந்ததால் ரூபாய் 10 ஆயிரம் பணம் வந்ததாகவும் கூறி ஆசிரியர் ஒருவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுக்க பெருமூச்சு விட்டபடி பஞ்சர் கடையைத் தொடங்கி தற்போது வரை நம்பிக்கையோடு நடத்தி வருகிறார்.

தன்னுடையை மகன்கள் அருகில் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தாலும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த விஜயலட்சுமியை பொறுத்த வரை கடையில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு, ஆடு மாடுகளைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுகின்றார். தேசிய நெடுஞ்சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பஞ்சர் ஒட்டிக் கொடுக்கிறார், இரவு பகல் பாராது. கிராமத்தில் அழைத்தால் டிராக்டர் ஓட்டி உழவும் செய்து தருகிறார்.

இப்போது படிப்படியாக முன்னேறி சொந்தமாக டிராக்டர் வாங்கி ஓட்டும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.

"சிறு வயதில் பஞ்சர் ஒட்டும் தொழிலை ஆரம்பித்து இன்றுவரை ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோமே வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று எண்ணியபோது அதுவும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழிலாக இருக்க வேண்டும். அதை நாம் செய்து சாதிக்க வேண்டும் என நினைத்து ஒரு டிராக்டர் வாங்கி வீட்டின் முன்பு நிறுத்தினேன்.

"குறைந்த வாடகையில், உழவு ஓட்டித்தரப்படும் என்று எழுதி வைத்தேன். ஆம்பள உழவு உழுதாலே ஆழமா உழவு ஓட்டமாட்டாங்க. இதுல பொம்பள ஆழமா உழவு ஓட்ட முடியுமா என்று அப்போதும் சிலர் பேசினார்கள்.முதலில் கொஞ்சம் வருமானம் டல்லாக இருந்தது.

"ஒரு சீசனில் மழை அதிகம் பெய்து உழவுக்கு டிராக்டர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்ட போது, சரி வா என்று உழவு ஓட்ட கூட்டிச் சென்றவர்கள், அவசரமில்லாமல் காடு முழுவதையும் மிக ஆழமாக நான் உழவு ஓட்டுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்.

"5 லட்சம் ரூபாய்க்கு லோன் போட்டு வாங்கிய டிராக்டரின் கடன் முழுவதையும் கட்டிவிட்டேன்.இந்தக் கைகளும் மன உறுதியும் தைரியமும் இருந்ததால் என்னால் இந்த அளவு உயர்வுக்கு வர முடிந்தது! பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்!வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வாருங்கள் பெண்களே! இந்த உலகை வென்று காட்டலாம்!" என்கிறார் விஜயலட்சுமி, நம்பிக்கையோடு!

க செ கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: