பூரணசுந்தரியிடம் வாழ்த்து.. மாணவி நேத்ரா பெருமிதம்…

பூரண சுந்தரியை சந்தித்து வாழ்த்து பெற்றேன் – ஏழைகளின் நல்லெண்ண தூதர் மாணவி நேத்ரா பெருமிதம்

பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற பூரணசுந்தரியை சந்தித்து வாழ்த்து பெற்றது பெருமையாக உள்ளது என்று யு என் ஏ டி ஏ பி என்ற ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதர் மாணவி நேத்ரா பெருமிதம்.

மதுரை மணிநகரத்திலுள்ள பார்வை மாற்றுத்திறனாளியும் அண்மையில் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 286 வது இடம் பெற்று சாதனை படைத்தவருமான பூரண சுந்தரியை, ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட யு என் ஏ டி ஏ பி என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பாக உலக ஏழைகளின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்ட மாணவி நேத்ரா இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து மாணவி நேத்ரா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ‘ஐஏஎஸ் தேர்வில் பூரண சுந்தரியின் வெற்றி மதுரை மக்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். இவரின் வெற்றி இளைஞர்களுக்கும் என்னைப்போன்ற மாணவிகளுக்கும் மிகுந்த ஊக்கம் தருவதாகும். மேலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எனது நோக்கமாக இருக்கின்ற காரணத்தால் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய பூரணசுந்தரி ஐஏஎஸ், ‘கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய எதிர்கால சேமிப்பான ரூபாய் ஐந்து லட்சத்தை செலவிட்ட நேத்ராவின் தொண்டுள்ளம் பாராட்டிற்குரியது. அந்த உதவியை தற்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற நேத்ராவின் பணி போற்றுதலுக்குரியது. இன்றைய காலத்தில் ஐந்து ரூபாயைக் கூட அடுத்தவர்களுக்காக செலவு செய்கின்ற மனப்பக்குவம் உள்ளவர்களை காண்பது அரிது. நேத்ராவின் ஐஏஎஸ் கனவு நிச்சயம் நிறைவேறும்.அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: