மணல் திருடு…லாரி பறிமுதல்

*திருச்சுழி குண்டாறு பகுதியில் ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி பறிமுதல் .*

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் உள்ள குண்டாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி பறிமுதல் செய்து வட்டாட்சியர் நடவடிக்கை.

திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாற்றில் இரவு நேரங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகல் நேரங்களிலும் அவ்வப்போது திருட்டுத்தனமாக மர்ம நபர்களால் மணல் அள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தமிழ்பாடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சுழி வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இயற்கை கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான சிறப்பு பணிக்குழு ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் படி, திருச்சுழி குண்டாறு மற்றும் நரிக்குடியில் உள்ள கிருதுமால் நதி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளைப் பறிமுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திருச்சுழி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: