மான் இறைச்சி பறிமுதல் : ஒருவர் கைது:

ராஜபாளையம் அருகே, 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல்… ஒருவர் கைது…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனவர் இளவரசன் தலைமையில், வனத்துறையினர் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்லுப்பத்தி பீட் வனப் பகுதியில் மான் வேட்டையாடப்பட்ட அடையாளம் தெரிந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விசாரணையில் சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28) மற்றும் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரிந்தது. மாரிமுத்து வீட்டில் சமைப்பதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மாரிமுத்துவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் மான் வேட்டையில் தொடர்புள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: