மக்கள் தொடர்பு முகாம்:

மக்கள் தொடர்பு முகாம்: சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம்,
பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்,
பல்வேறு துறைகளின் சார்பில் 144 பயனாளிகளுக்கு
ரூ.73.86 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் உள்வட்டம், பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், முன்னிலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையேற்று, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மக்கள் தொடர்பு முகாம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 2022-ல் மக்கள் தொடர்பு முகாம்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தொடர்பாக விரிவான அரசாணையினை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அதில், மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் உட்பட அரசின் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு, அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தி யுள்ளார்கள்.
அதனடிப்படையில், இன்றையதினம் கல்லல் உள்வட்டம், பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, முன்னதாக, இக்கிராமப்புறத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அழகப்பா கலைக்கல்லூரியைச் சார்ந்த நாட்டு நலப்பணி திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணாக்கர்களைக் கொண்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இளைய தலைமுறையினர்கள் அரசின் திட்டங்களையும், அதன் பயன்களையும் பொதுமக்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்பது குறித்து அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் இவை அடிப்படையாக அமைகிறது. அதன்படி, மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கிராமத்தைப் பொறுத்த வரையில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் சமுதாயக்கிணறு, திறந்தவெளி பொதுக்கிணறுகள், வேளாண் இடுபொருட்களை ஆகியவைகளுடன், 45 தொகுப்புக்கள் நடப்பாண்டிற்கு செயல்படுத் தப்பட்டுள்ளது. இதேபோன்று ,அடுத்த ஆண்டிற்கும் இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.
மேலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து முதலில் அறிந்து கொண்டு, அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை அணுகி, அதன் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.7,00,000 மதிப்பீட்டில் பட்டா மாறுதல் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டாக்களுக்கான ஆணைகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு குழித்தட்டு நாற்றுக்களுக்கான இடுபொருட்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 6 பயனாளிகளுக்கு ரூ.14,600மதிப்பீட்டில் பயிர் வகைகள் மற்றும் மரக்கன்றுகளையும்,
சுகாதாரத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் 3 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்களும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு ரூ.4,80,350 மதிப்பீட்டில் பயிர்க்கடனுதவிக்கான ஆணைகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தின் கீழ், 60 பயனாளிகளுக்கு தலா ரூ.10,800வீதம் ரூ.6,48,000 மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சுக்குழி அமைத்தலுக்கான ஆணைகளையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4,71,500 மதிப்பீட்டில் பல்வேறு உதவி உபகரணங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.41,05,000 மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிகளையும் என மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.73,85,450 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இம்மக்கள் தொடர்பு முகாம் தொடர்பாக, பி.நெற்புகப்பட்டி கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற அழகப்பா கலைக்கல்லூரியைச் சார்ந்த நாட்டு நலப்பணி திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர், வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்;ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை , மாவட்ட ஆட்சித்தலைவர், பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு.காமாட்சி, இணை இயக்குநர்கள் ஆர்.தனபாலன் (வேளாண்மைத்துறை), மரு.வே.சு.இராகவன் (கால்நடைப் பராமரிப்புத்துறை(பொ)), இணைப்பதிவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கோ.ஜீனு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன்,
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குஅழகுமலை, கல்லல் ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ம.நாராயணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெ.பிரவீணா, பி.நெற்புகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திராவிடமணி, காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசுத்துறை முதன்மை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: