பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனிப்படைகள்: ஆ ட்சியர்:

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகளை கண்காணிக்க 4 தனிப்படைகள் அமைத்து, ஆட்சியர் நடவடிக்கை…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விதிமீறல்களை
கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, 4 சிறப்பு தனிப்படைகளை அமைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 47 நாட்கள் மட்டுமே உள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாடங்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருளான (பேரியம் நைட்ரேட்) பச்சை உப்பு, பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றதா, சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனை கண்காணிப்பதற்காக சிறப்பு ஆய்வு குழுவை அமைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தடை செய்யப்பட்ட மூலப் பொருள் பயன்படுத்தப் படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையிலும் வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர், தீயணைப்பு நிலைய அலுவலர், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆகிய 4 பேர் கொண்ட, 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் இன்று முதல், வரும் 25ம் தேதி வரை தினசரி பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள். தனிப்படை ஆய்வு குழுவினர் பட்டாசு ஆலைகளில், தடை செய்யப்பட்ட மூலப் பொருள் பயன்படுத்தப் படுகிறதா, இரவு நேரங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள சரவெடிகள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வார்கள். மேலும் பட்டாசு ஆலைகள் தவிர்த்து, வீடுகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள். தனிப்படை ஆய்வுக்குழு விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர் ஆய்வில் ஈடுபடுவார்கள். விதி மீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: