பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை:

சிவகாசி பகுதிகளில் ஆடி மாத நிறைவு நாளை முன்னிட்டு, பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசுகளுக்கான தேவைகள் அதிகமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட நாட்களுக்கு பட்டாசு ஆலைகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் மற்றும் இரண்டாம் நாட்களிலும், ஆடி மாத கடைசி நாளிலும் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று பட்டாசு தொழிலுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஆடி மாதத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் கலவையின் போது விபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் அவ்வப்போது பெய்துவரும் சாரல் மழையும், தூறல் மழையும் பட்டாசு உற்பத்திக்கு ஏதுவாக இருக்காது. இதனால் ஆடி மாதத்தில் பட்டாசு உற்பத்தி ஓரளவு குறைவாகவே நடந்து வரும். மேலும் பட்டாசு ஆலைகள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் தான் அமைந்துள்ளன. கிராமப்பகுதிகளில் ஆடி மாதத்தை, அம்மன் மாதமாக கருதி விழாக்கள் நடைபெறுவது வழக்கம். விழாக்களில் கலந்து கொள்வதற்காக பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பெரும்பாலும் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். பட்டாசு தொழிலில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, பட்டாசு ஆலை தொழிலாளர்கள் அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். நடப்பு ஆண்டில் பட்டாசு தொழிலில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், பட்டாசு தொழிலுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் உற்பத்தி அதிகமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இன்று ஆடி மாதத்தின் கடைசி நாள் என்பதால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் பட்டாசு ஆலை தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கோவில்களுக்குச் சென்று கடவுள்களை வணங்குவதுடன் மனமும், உடலும் புத்துணர்வு பெறுவதற்காக குற்றாலம் அருவிகளுக்குச் சென்று நீராடி மகிழ்வதும் உண்டு. இதற்குப்பின் தீபாவளி நாள் வரை பட்டாசு ஆலைகளில் விடுமுறை இல்லாமல், பட்டாசு உற்பத்தி பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: