முளைப்பாரி ஊர்வலம்:

ராஜபாளையம் அருகே, நெசவாளர்கள் முளைப்பாரி திருவிழா… பல்லாயிரக்கணக்கானவர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ பேண்டேஜ் மருத்துவத்துணி உற்பத்தி மற்றும் நெசவு தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள நெசவாளர்கள் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வாரத்தில் விரதம் இருந்து, முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதில் அந்தப்பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், தங்களது குடும்பத்தினருடன் முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக முளைப்பாரி திருவிழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யானாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பத்தினர், விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். நேற்று யோகமாரியம்மன், செல்வமுளை மாரியம்மன், முளை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து ஊர்களில் உள்ள முக்கியமான வீதிகள் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் பகுதியில் உள்ள கிணற்றில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டது. முளைப்பாரி திருவிழாவில் பேண்டேஜ் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், நெசவு தொழில் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: