மாணவர்களுக்கு தேசீயக்கொடி: ஆட்சியர்:

தேசியக்கொடியினை ஏற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு தேசியக் கொடியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்:

சிவகங்கை:

75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், மாணாக்கர்களுக்கு தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்,
இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதனை 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழாவாக அரசால் கொண்டாடப்படும் நோக்கில், தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரத்தாய் குயிலி போன்றோர்கள் நமது மண்ணில் பிறந்து வாழ்ந்து, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், சிராவயல் கிராமத்தில் அண்ணல் காந்தியடிகள் வருகை புரிந்த போது, காரைக்குடியிலிருந்து சிராவயல் செல்லும் போது அங்கிருந்த மக்களின் நிலையைப் பார்த்து, அன்று முதல் கதர் ஆடையை பயன்படுத்தினார்.
இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களின் மூலம் நமது இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இதனை போற்றிடும் விதமாக மாணாக்கர்களாகிய நீங்கள் தங்களது பெற்றோர்களிடம் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழா குறித்து, தாங்கள் அறிந்தவைகளை கடிதமாக எழுதி தங்களது பெற்றோர்களிடம் வழங்க வேண்டும்.
75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வருகின்ற 13.08.2022, 14.08.2022 மற்றும் 15.08.2022 ஆகிய தினங்களில் தங்களது வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, அனைவரின் பங்களிப்பையும் அளித்திடும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இவ்விழிப்புணர்வு பணிகளுக்கென கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களிடம் தேசியக்கொடி வழங்கப்பட்டு, இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் மாணாக்கர்கள் எடுத்துரைத்து, மேற்கண்ட நாட்களில் தேசியக்கொடியினை தங்களது வீடுகளில் ஏற்றி வைத்திட நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது. துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திருக்கலாம். ஆனால், மாணாக்கர்கள் தங்களின் கடிதங்களின் வாயிலாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தால்தான், இதன் முக்கியத்துவத்தினை ஒவ்வொருவரும் உணரமுடியும்.
இன்றைய நவீன காலத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை நடைமுறைப்
படுத்திடவும் , ஆசிரியர் பள்ளி வேலை நேரங்களில், மாணாக்கர்களுக்கு தினமும் 10 நிமிடம் ஒதுக்கி, மாணாக்கர்களிடையே அறிவு சார்ந்த ஏதாவதொரு நிகழ்வு குறித்தும், அனுபவங்கள் குறித்தும் கடிதங்கள் எழுதிட பழக்கப்படுத்திட வேண்டும்.
மாணாக்கர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமன்றி, கூடுதலான திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தங்களது பள்ளியில் உள்ள நூலகங்களை பயன்படுத்தி, அறிவுத்திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தேசியக்கொடியினை முறையாக எவ்வாறு மடிப்பது மற்றும் வீட்டில் பத்திரமாக பராமரிப்பது என்பது குறித்து மாணாக்கர்களிடையே எடுத்துரைத்து, 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழா குறித்து மாணாக்கர்கள் எழுதிய கடிதங்களை அவர்கள் வாயிலாகவே வாசிக்க சொல்லி கேட்டறிந்து, பாராட்டுக்களை தெரிவித்து, பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் தொடர்பாகவும், ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.வானதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகவள்ளி, பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் முத்துச்செல்வி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: