மாணவர்களுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சி:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர்:

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், இராகினிப்பட்டி சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்று, உயர்கல்வியில் சேருவதற்கு தயாராக உள்ள மாணவர்களுக்கான கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்டந்தோறும் தற்போது ,
நடைபெற்று வருகிறது. கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியத்துறைகள் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாணவ, மாணவியர்கள் மேற்படிப்பு மற்றும் உயர்படிப்பு பயில்வதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. எந்தப்பிரிவைச் சார்ந்த படிப்பை நாம் படித்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும் என்பதையும், வாழ்க்கைக்கு அடித்தளமானது படிப்புதான் என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படையாக தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்த மாணாக்கர்கள் பல்வேறு உயர்கல்வி பாடப்பிரிவில் சேர்ந்து பயிலுவதற்கும், வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்பாடப்பிரிவுகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உட்பிரிவுகள் பற்றியும் அவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் திறமைமிக்க வல்லுநர்கள் வாயிலாக விளக்கம் அளிக்கப்படவுள்ளன. கல்லூரி கல்விக்கடன் தொடர்பாக வங்கிகளை அணுகி, கல்விக்கடன் பெறும் முறைகள் குறித்தும். உயர்கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும், மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, விளக்கம் அளித்திடவும் நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்டவைகள் தொடர்பாகவும், சிறந்த கல்லூரிகள் குறித்தும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து விபரங்கள் அடங்கிய கையேடுகளும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி விகிதத்தில் நமது சிவகங்கை மாவட்டம் 6-வது இடத்தை பெற்றுள்ளது. இனிவரும்காலங்களில் முதல் மூன்று இடத்தில் சிவகங்கை மாவட்டம் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணாக்கர்கள் கடந்தாண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தும் பயின்று வருகின்றனர். தற்சமயம் நீட் போட்டித்தேர்வில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் தொகுதி-2 மற்றும் தொகுதி-4 ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாகவும் மாவட்டத்தில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று மாணாக்கர்களின் நலன் கருதி தமிழக அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவர்களை பயன்பெறச் செய்து வருகிறது.
எனவே, இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களையும் உள்வாங்கி, இது குறித்து தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி, தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்லமுறையில் பயின்று, தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), நந்தக்குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்
தலைவர் பா.மஞ்சுளா பாலசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி (சிவகங்கை), செ.சண்முகநாதன் (தேவகோட்டை), சி.பாலதிரிபுரசுந்தரி (திருப்பத்தூர்(பொ)), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கு.சம்பத்குமார் (மேல்நிலைப்பள்ளி), ஜி.அருளானந்தம் (இடைநிலைப்பள்ளி), காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, உதவி திட்ட அலுவலர் எ.பீட்டர் லெமாயூ, உதவி இயக்குநர் (இடைநிலை கல்வித்திட்டம்) சு.சீதாலெட்சுமி, பள்ளி தலைமையாசிரிகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: