ரேஷன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது:

சாத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திச்சென்ற லாரியை, போலீசார் விரட்டி பிடிப்பு:

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், சாத்தூர் – கோவில்பட்டி நெடுஞ்சாலையில், படந்தால் விலக்கு அருகே, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால், லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தாமல், போலீசாரை ஏமாற்றிவிட்டு வேகமாக லாரியை ஓட்டிச் சென்றார். அங்கிருந்த போலீசார் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்டுகொண்ட லாரி ஓட்டுனர், பெத்துசெட்டிபட்டி விலக்கில் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
லாரியில், இருந்த மற்ற ஒரு நபரும் தப்பியோடி விட்டார். லாரியை சோதனை செய்த போலீசார், அதில் 400 மூடைகளில் சுமார் 20 டன் ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.
இது குறித்து, மாவட்ட உணவுப்பொருட்கள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், ரேசன் அரிசி மூடைகள் கடத்திச்சென்ற லாரியை பறிமுதல் செய்து சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ரேசன் அரிசி மூடைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது, இதில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: