பட்டாசு ஆலையில் வெடி விபத்து:ஓருவர் சாவு :

சாத்தூர் அருகே இன்று காலை, பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… ஒருவர் பரிதாப பலி…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்தப் பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை, பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வருவதற்கு முன்பாக, மருந்து கலவை செய்யும் பணியாளர்கள் 3 பேர் மட்டும் பட்டாசு ஆலைக்குள் மருந்து கலவை செய்வதற்காக வந்தனர். சக்கரம் வெடி தயாரிப்பதற்கான மருந்து கலவை செய்யும் பணியில், சுந்தரக்குடும்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலை விக்னேஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூலப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை செய்யும் அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய சோலை விக்னேஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த சோலை விக்னேஷ் உடல் மீட்கப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அம்மாபட்டி காவல்நிலைய போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலைக்குள், காலை நேரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால்
பட்டாசு ஆலைகளில், மருந்து கலவை செய்யும் பணிகள் அதிகாலையில், வெயிலின் கடுமை வருவதற்குள் செய்து முடிக்கப்படுகிறது. இருந்தாலும் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: