வெம்பக்கோட்டை அணைப்பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான், நாய்கள் கடித்து பரிதாப உயிரிழப்பு…..
சாத்தூர் :
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது வெம்பக்கோட்டை அணை.
இந்த அணைப்பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியிலிருந்து புள்ளிமான்கள், மிளா உள்ளிட்ட காட்டு விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். தண்ணீர் அருந்துவதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. இதனை அந்தப்பகுதியில் இருந்த நாய்கள் பார்த்து, புள்ளிமானை விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்தின. அந்தப்பகுதியில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி விட்டு, புள்ளிமானை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட புள்ளிமான் குறித்து,
வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய், திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்துவந்த வனச்சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன், வனக்காப்பாளர் அன்னத்தாய் மற்றும் வனத்துறை ஊழியர்கள் புள்ளிமானை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் காயமடைந்திருந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, புள்ளிமான் உடலை கூறாய்வு செய்து வைப்பாற்றி்ன் கரையில், வனத்துறை ஊழியர்கள் புதைத்தனர். நாய்கள் விரட்டி கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.