விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர்:

விருதுநகரில், விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…..

விருதுநகர் :

அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி
விஜயநல்லதம்பி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி 3 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். அவரை கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி, ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. கடந்த 31ம் தேதி விசாரணைக்கு ஆஜரான ராஜேந்திரபாலாஜியிடம் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் இல்லாததால், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று நன்பகல், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ராஜேந்திரபாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன், ஆய்வாளர் கணேஷ்தாஸ் விசாரணை நடத்தினர். இரவு 10 மணி வரை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜரான ராஜேந்திரபாலாஜியுடன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். வழக்கு குறித்து மேலும் விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: