ராஜபாளையம் நகராட்சியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளரின் கணவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார்…..
ராஜபாளையம் :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றுவதற்கு திமுக, அதிமுக கட்சிகளிடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. நகராட்சியின் 29வது வார்டில் திமுக கட்சி சார்பில் கீதா, அதிமுக கட்சி சார்பில் ராதிகா போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ராதிகாவை வாபஸ் வாங்குமாறு, திமுக கட்சியினர் வலியுறுத்தி வந்துள்ளனர். ராதிகாவின் கணவர் ராஜேந்திரனிடமும், திமுக வேட்பாளர் தரப்பினர் தொடர்ந்து வாபஸ் வாங்கச்சொல்லுமாறு கூறியுள்ளனர். ராதிகாவும், ராஜேந்திரனும் மறுத்துவந்த நிலையில் நேற்று இரவு, அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு செல்வதாக கூறிச்சென்ற ராஜேந்திரன் அதன்பிறகு காணாமல் போனார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் திமுக கட்சியினர் ராஜேந்திரனை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ராதிகா ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வேட்பாளரின் கணவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்பாளரின் கணவர் திடீரென்று மாயமான சம்பவம், ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.