முன்னாள் அதிமுக நிர்வாகிக்கு தொற்று:

முன்னாள் அமைச்சர் மீது பண மோசடி புகார் கொடுத்த, முன்னாள் அதிமுக நிர்வாகிக்கு தொற்று பாதிப்பு…..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பி. இவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, 3 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் விஜயநல்லதம்பி மீதும் பண மோசடி புகார் உள்ளது. இந்த புகாரில் தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பி, சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்கு பின்பு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் தினமும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விஜயநல்லதம்பியும் தொற்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அதிமுக முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, மதுரையில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழக்கில் சற்று தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: