பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசணைக் கூட்டம்:

சிவகாசியில் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கங்கள் இணைந்து ஆலோசனை கூட்டம்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிலில் நேரிடையாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பட்டாசு சார்ந்த அச்சகங்கள், கட்டிங், ஸ்கோரிங் உள்ளிட்ட பல தொழில்களில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டு மொத்தமாக பட்டாசு தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டம் தொழில் துறையில் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் பட்டாசு தொழிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் உபயோகிக்க கூடாது, சரவெடிகள் முற்றிலுமாக தயாரிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை முடிந்து 50 நாட்கள் ஆன நிலையிலும், இது வரை பட்டாசு ஆலைகளில் உற்பத்திகள் தொடங்கப்படாத நிலையே உள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரியும், சரவெடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கமும் போராட்டம் நடத்தியது. ஆனால் இது வரை பட்டாசு ஆலைகளுக்கான பிரச்சினையில் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் 3 சங்கங்கள் மற்றும் சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்களின் 2 சங்கங்கள் என அனைத்து பட்டாசு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது. வரும் ஜனவரி மாதம் தமிழகம் வருகை தர இருக்கும் பிரதமர் நரேந்திரமோடியை, பட்டாசு உற்பத்தியாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் கூறினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: