அணையை பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர்:

விருதுநகர் அருகேயுள்ள அணையை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…..

விருதுநகர் :

விருதுநகர் அருகேயுள்ள ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆட்சியர் மேகநாதரெட்டி கூறும்போது, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைக்கட்டுகள், நீர் நிலைகள், கண்மாய் பகுதிகளில் நீர்வரத்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆணைப் பகுதிகளில் நீர்வரத்து கண்காணிக்கப்படுவதுடன், அணைகளின் கரைகளின் பலங்கள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக நீர்வரத்து இருக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைக்கட்டுப் பகுதிகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, பெரும் மழைக்காலத்தில் அவர்களுக்கு தேவையான தங்கும் இடவசதி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கூறினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜா, சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: