பட்டாசு ஆலையில் வெடி விபத்து:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
விபத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பரிதாப பலி…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் பகுதியில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில், 5 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருள் கலவை செய்யும் அறையில், மீனம்பட்டி ஜான்சிராணி காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (60), மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கிய ஆனந்தராஜ் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி சிதறிக்கிடந்த ஆனந்தராஜின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு விரைந்து சென்ற சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனித்தாசில்தார் சிவஜோதி விசாரணை நடத்தினர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: