மின்னல் தாக்கி 3 பேர் பலி..

சாத்தூர் அருகே பரிதாபம்.
கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள், 1 சிறுவன் மின்னல் தாக்கி பலி…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள நள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரவள்ளி (56), தங்கமாரியம்மாள் (45), கருப்பசாமி (16), கன்னியம்மாள் (45), மாரியம்மாள் (60), மாரிகணேஷ் (13). இவர்கள் 6 பேரும் நள்ளி காட்டுப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு, நேற்று மாலை சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டே காட்டுப்பகுதி வழியாக 6 பேரும், வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கடுமையான மின்னல் தாக்கியதில் கருப்பசாமி, சண்முகசுந்தரவள்ளி, தங்கமாரியம்மாள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயமடைந்து மயங்கி விழுந்தனர். நீண்ட நேரத்திற்கு பின்புதான் மின்னல் தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் தெரிய வந்தது. தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த 3 பேரின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: