சிவகாசியில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்தவர் காளீராஜ் (30), இவரது மனைவி தங்கபுஷ்பம் (25). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), காயத்ரி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவி இருவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். காளீஸ்வரன் மது போதைக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்து வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பட்டாசு ஆலைகளிலும் சரிவர வேலையில்லாததால், குழந்தைகளுடன் தங்கபுஷ்பம் கடுமையான கஷ்டத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை தங்கபுஷ்பம், குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த தங்கபுஷ்பம், தனது மகனும் மகளும் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அலறித்துடித்தார். குழந்தைகளின் கழுத்தில் காயத்தழும்பு இருந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, விரைந்து வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஊதாரிதனமாக சுற்றித்திரிந்த காளீராஜை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.